google lens rolls out to all android smartphones
எல்லா மொபைலுக்கும் கூகுள் லென்ஸ் வந்தாச்சு!

புகைப்படங்கள் மூலம் தகவல் அறியும் கூகுள் லென்ஸ் வசதி அனைத்து மொபைல்களுக்கும் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய கூகுள் ஐ/ஓ (Google I/O) நிகழ்வில் எதிர்வரும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி அறிமுகம் செய்தது. இதில் கூகுள் அஸிஸ்டெண்ட் (Google Assistant), கூகுள் லென்ஸ் (Google Lens) ஆகியவை அதிக சுவாரஸ்மானவையாக இருந்தன. பலரது கவனத்தையும் ஈர்த்த இந்த வசதிகளில் கூகுள் அஸிஸ்டெண்ட் தனி அப்ளிகேஷனாக அறிமுகமாகியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் லென்ஸ் பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டும் சில மாதங்கள் முன்பாக பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது, இந்த வசதியை அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் லென்ஸ் என்பது புகைப்படங்கள் மூலம் தகவல்களைப் பெறும் நவீனத் தொழில்நுட்பமாகும். ஒரு புகைப்படத்தில் உள்ளவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும்.
கட்டிடம் ஒன்றின் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்தால் அந்தப் கட்டிடத்தில் இருக்கும் கட்டிடத்தைப் பற்றிய தகவல் திரையில் தோன்றும். இதே போல, ஒரு புகைப்படத்தில் உள்ள எந்த பொருளைப் பற்றியும் தகவல் கொடுக்கும். ஒரு நபரின் புகைப்படம் என்றால், அவர் யார் என்பதை கூகுள் லென்ஸ் தெரிவிக்கும்.

இது மட்டுமின்றி. பார் கோட் வடிவில் உள்ள தகவல்களை ஒரே நொடியில் ஸ்கேன் செய்து பயன்படுத்தலாம். உதராணமாக, மொபைல் எண் பார் கோட் (Bar Code) வடிவில் இருந்தால் அதை ஸ்கேன் செய்து மொபைலில் எளிமையாக சேமித்து வைக்கலாம். மொபைல் எண்ணைப் பார்த்து டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

கூகுள் போட்டோஸ் (Google Photos) அப்ளிகேஷனின் புதிய அப்டேட் உடன் கூகுள் லென்ஸ் வசதியும் கிடைக்கும். கூகுள் போட்டோஸ் அப்ளிகேஷனில் ஒவ்வொரு போட்டோவிற்கான ஆப்ஷன்களிலும் கூகுள் லென்ஸ் ஐகான் இருக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட போட்டோவில் உள்ளதைப் பற்றிய தகவலை அறியலாம்.

ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த வசதி விரைவில் ஐபோன்களுக்கும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.